வைரமுத்துவின் கவிதைகள்
Posted On Saturday, October 4, 2008 at at 11:14 AM by வே.சிவா
1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை நெகிழ்த்து
மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி
2. காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.
3. சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!
4. சிற்றிலக்கியக் காலம்
தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்
5. தேசிய காலம்
சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?
6 .திராவிட காலம் - 1
இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?
7. திராவிட காலம் -2
விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது? விடையாட வேண்டும் வாடி என் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே
8. புதுக்கவிதைக் காலம் -1
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை
9. புதுக்கவிதைக் காலம் - 2
உன்வீட்டு
ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு
நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய்
அழுக்குச் செய்த உள்ளாடைகள்
-வைரமுத்து
ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்
ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா
உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?
உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?
அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?
பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்
மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை
இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.
-வைரமுத்து
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
-வைரமுத்து