சொல்
[சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.]
தேவர் வருகவென்று சொல்வதோ? - ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்
ஆவ லறிந்துவரு வீர்கொலோ? - உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே. 1
‘ஓம்’ என் றுரைத்துவிடிற் போதுமோ? - அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந் தேகுமோ? - என்றன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ? 2
‘உண்மை ஒளிர்க’ என்று பாடவோ? - அதில்
உங்கள் அருள் பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால் - உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். 3
“தீயை அகத்தினிடை மூட்டுவோம்” - என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயக் கருடநிலை யேற்றுவீர் - எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீ£ர் 4
வான மழைபொழிதல் போலவே - நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்
கானை அழித்துமனை கட்டுவீர் - துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர் 5
விரியும் அறிவுநிலை காட்டுவீர் - அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் - நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர். 6
மின்ன லனையதிறல் ஓங்குமே - உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே
தின்னும் பொருளமுதம் ஆகுமே - இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே. 7
தெய்வக் கனல்விளைந்து காக்குமே - நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே.
கைவைத்து ததுபசும்பொன் ஆகுமே - பின்பு
காலன் பயமொழிந்து போகுமே. 8
‘வலிமை, வலிமை’ என்று பாடுவோம் - என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் - நெஞ்சில்
கவலை இருளனைத்தும் நீங்கினோம். 9
‘அமிழ்தம், அமிழ்தம்’ என்று கூவுவோம் - நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம் - என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம். 10
நந்தலாலா
[ ராகம் -- யகுல காம்போதி ] [ தாளம் -- ஆதி ]
காக்கச் சிறகினிலே
நந்தலாலா -- நின்றன்
கரியநிறந் தோன்றுதயே
நந்தலாலா; 1
பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
பச்சைநிறந் தோன்றுதயே
நந்தலாலா; 2
கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா; 3
தீக்குள் விரலவத்தால்
நந்தலாலா -- நின்னத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா. 4
கற்பனையூர்
கற்பனை யூரென்ற நகருண்டாம் - அங்குக்
கந்தர்வர் விளையாடு வராம்.
சொப்பன நாடென்ற சுடர்நாடு - அங்குச்
சூழ்ந்தவர் யாவருக்கும் பேருவகை. 1
திருமணை யிது கொள்ளைப் போர்க்கப்பல் - இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்.
வெருவுற மாய்வார் பலர் கடலில் - நாம்
மீளவும் நம்மூர் திரும்பு முன்னே. 2
அந்நகர் தனிலோர் இளவரசன் - நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே - அவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3
எக்கால மும்பெரு மகிழ்ச்சி யங்கே
எவ்வகைக் கவலையும் போரு மில்லை;
பக்குவத் தேயிலை நீர்குடிப்போம் - அங்குப்
பதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4
இன்னமு திற்கது நேராகும் - நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்
நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம் - நம்மை
நலிந்திடும் பேயங்கு வாராதே. 5
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண் - அங்குக்
கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம் - அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம், 6
செந்தோ லசுரனைக் கொன்றிடவே - அங்குச்
சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள்
சந்தோ ஷத்துடன் செங்கலையும் - அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7
கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே - வழி
காண்ப திலாவகை செய்திடுவோம் - ஓ!
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே! - நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8
குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம் - அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே;
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம் - நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே. 9
ஜய பேரிகை
பல்லவி
ஜய பேரிகை கொட்டடா - கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா! (ஜய)
சரணங்கள்
பயமெனும் பேய்தனை யடித்தோம் - பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம். (ஜய பேரிகை) 1
இரவியி னொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஜய பேரிகை) 2
காக்கை, குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். (ஜய பேரிகை) 3
அறிவே தெய்வம்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெனல் கேளீரோ? 1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் - எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ? 2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? 3
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே. 5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே. 6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? 7
உள்ள தனைத்திலும் முள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ? 8
மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ? 9
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே. 10
சங்கு
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம். 1
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுத்தி சேர்ந்திடநாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம். 2
பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம். 3
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம். 4
அச்சமில்லை! அச்சமில்லை!
[பண்டாரப் பாட்டு]
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 1
கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2
மாயையைப் பழித்தல்
[ராகம் - காம்போதி] [தாளம் - ஆதி]
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ
மாயையே - மனத்
திண்மையுள் ளாரைநீ செய்வது
மொன்றுண்டோ - மாயையே. 1
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனும் தீயின்முன்
நிற்பாயோ - மாயையே. 2
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் – மாயையே! 3
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே - இந்தத்
தேகம் பொய் யென்றுணர் தீரரை யென்
செய்வாய் – மாயையே! 4
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப
மாயையே - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ - மாயையே. 5
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே. 6
என்னிச்சை கொண்டுனௌ யெற்றிவிட
வல்லேன் மாயையே-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்- மாயையே. 7
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தேர்ந்தனன் மாயையே - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன்
உன்னை - மாயையே. 8