வைரமுத்துவின் வைரவரிகள்





மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில

மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்

சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி
அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்

விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளி
விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்
சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒரு
தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்
சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறு
சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்
கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்

உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்
உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்
இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்
பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்
சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்
சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்
எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்
இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்
மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்
வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்
காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்
துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடி
தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்
பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுக
பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்
கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்
கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்

கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்
குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்
கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி
குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்
மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை
முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி
ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்
உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

மானிடம்

தேவா!
நாங்கள் புகழ் நிறைந்து வாழ வேண்டும்
எங்கள் மதிப்புக்கும் புகழுக்கும் கீழே
புனிதம் நிலவ வேண்டும்.

நற்செயலால் கிட்டும் ஆன்மபலத்தால்
எங்கள் ஜீவசக்தி வளர வேண்டும்.
எங்கள் வாழ்வு ஒளிகொண்ட திசைகளாய்ப்
பரந்து விரிந்து ஒளிர்ந்து திகழவேண்டும்.
நலம்தரும் அக்கினிதேவதைகளே!
என் எண்ணத்தில் சொல்லில் தேன்பொழிக!
மக்கள் மத்தியில் நான் பேசுவதெல்லாம்
தேனினிமை கொண்டதாய் அமையுமாறு அருளுங்....''

- அதர்வண வேதம்

* * * * *
அகோ ஐம்பூதங்களே!
எங்கள் வாகனங்கள் நீங்கள்
எங்கள்மேல் நீங்களே சவாரிசெய்யாதீர்கள்
நீங்களெல்லாம் நெகிழ்ந்துகொடுக்க வேண்டாம்
உங்கள் ரகசியம் அகழ்ந்தெடுக்க
மனிதஜாதிக்கு வலிமை கொடுங்கள்

நிலத்தின் முதல்துகளே!
நீரின் முதல்துளியே!
தீயின் முதற்பொறியே!
காற்றின் முதல் அணுவே!
வானின் முதல் வெளியே!
உங்களின் நீட்சியே நாங்கள்

வணங்குகிறோம்

எம்மால் மாசுறாமல் உம்மையும்
உம்மால் உயிர்கெடாமல் எம்மையும்
காத்தருளுங்கள்

பிறர்க்குச் சிந்தக்
கண்ணீர் கொடுங்கள்
எமக்குச் சிந்த
வேர்வை கொடுங்கள்

எங்கள் போகங்கள் பேணுங்கள்

உமிழ்நீரும் சுக்கிலமும்
வற்றாமற்காக்கும் வரமருளுங்கள்

சக்தியுள்ள வயதிலும்
சந்தர்ப்பமுள்ள பொழுதிலும்
ஒழுக்கம்பழுத்த உள்ளம் கொடுங்கள்
தாங்க முடிந்த தோல்வி கொடுங்கள்
கர்வம் பூசாத வெற்றி கொடுங்கள்

கவரல் ஒழிந்த செல்வம் கொடுங்கள்
பொறாமையுறாத புகழ் கொடுங்கள்

கவிதைகளும் மேகங்களும்
அழைத்தால் பொழியுமாறு அருள்பாலியுங்கள்

மானுடத்தின் கீதங்களைக்
காற்றுக்கு எழுத்தறிவித்துக்
கற்றுக் கொடுங்கள்

மேகத்தின் இடியோ
செய்யாத பழியோ
தலையில் விழாமல் தடுத்தாட்கொள்ளுங்கள்

தாமரையிலைத் திவலைகள் நாங்கள்
கடுகி வீசாவண்ணம்
காற்றை கட்டிவையுங்கள்

எல்லாரும் சிரிக்கின்ற வாழ்வுகொடுங்கள்
எதிரியும் அழுகின்ற மரணம் கொடுங்கள்

எங்கள் வாழ்வின் கோப்பையை
ஊற்றும்போதே உடைத்துவிடாதீர்கள்
நிறைந்தபிறகு வழியவிடுங்கள்.
__________________

கவிதைகளை ரட்சியும் - வைரமுத்து

அதிகாலை
சூரியன்கூட இன்னும்
முகம் கழுவவில்லை

வாசிக்க ஆளில்லை

என்னும்
வானப்புத்தகம்
திறந்திருந்தது

எனது தவச்சாலையாய்
மொட்டைமாடி

நட்டுவைத்த மௌனங்களாய்
மரங்கள்
அங்கங்கே
புள்ளினங்களின் பூபாளம்

கலை என்பது
இயற்கை வாழ்க்கை
இரண்டின் மொழிபெயர்ப்போ?

“அப்பா
உங்களைப் பார்க்க நிறையபேர்”

என் மகன்
கதவு தட்டிக்
கனவுடைத்தான்

கலைந்த தலை
கசங்கிய லுங்கி
முகத்தில் முள்

பரவாயில்லை

கவிதைக்கும் கவிஞனுக்கும்
நிஜமே கம்பீரம்

கீழே வந்தேன்

முகங்கள் முகங்கள்
முழுக்க முழுக்க முகங்கள்

படித்த முகங்கள் பாமர முகங்கள்
கனவு முகங்கள் கழுவாத முகங்கள்
அன்பில் குழைந்த ஆர்வ முகங்கள்
மழலை சுமந்த மாதர் முகங்கள்

‘வணக்கம்’

ஓ!

ஒரேபொழுதில்
அத்தனை உதட்டிலும் பூப்பூக்க வைக்கும்
அற்புத மந்திரமா ‘வணக்கம்’?

“எந்த ஊர் நீங்க?”

ஊர் சொன்னார்கள்

“என்ன விஷயம்?”

“ஒங்க பாட்டுன்னா உசுரு”

லுங்கி சிறகானது

“எல்லோருக்கும் டீ சொல்லுப்பா”

தேநீரைப் போலவே
சுடச்சுடக் கேள்விகள்

“ஒரு பாட்டு எழுத
எவ்வளவு நேரம்?”

“அதிகபட்சம்
அரை மணி நேரம்”

“பாட்டுக்கு எவ்வளவு
பணம் வாங்குறீங்க?”

“வாங்கவில்லை
கொடுக்கிறார்கள்”

“பாரதிராஜா உங்களுக்குச்
சொந்தக்காரரா?”

“ஆமாம் ‘கலைச்சொந்தம்’”

“ரஜினியோடு
சாப்பிடதுண்டா?”

‘உண்டு’

“கமல் டெலிஃபோன்
பண்ணுமா?”

“எப்போதாவது”

“நடிகைகள் வருவார்களா?”

“வந்திருக்கிறார்கள்
கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதற்கு”

“உங்களைப் பற்றியும்
கிசுகிசு வருகிறதே”

“என் புகழுக்கு அது போதாது”

“உங்களைத்
தொந்தரவு செய்கிறோமா”

“இல்லை
தோகை, மயிலுக்குத்
தொந்தரவா?

“உங்களுக்குப்
பிடித்த பாட்டு…”

‘காதல் சிறகைக்
காற்றினில் விரித்து’

“நீங்கள் நினைத்து
நிறைவேறாமல் போன ஆசை?”

‘மொட்டை மாடியிலிருந்து
குதிக்க வேண்டும்’

“உங்கள் பலம் எது?
பலவீனம் எது?”

‘பலம் - பகை
பலவீனம் - சொந்தம்’

“குறைந்த நாளில்
நிறையச் சம்பாதித்த கவிஞர்
நீங்கள் தான்”

‘இல்லை
எனக்கும்
மாசக்கடைசிகள் உண்டு’

“எங்களுக்கு
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

‘மீண்டும் வணக்கம் சொல்ல
விரும்புகிறேன்’

சிரித்தார்கள்

அலையலையாய் அழகழகாய்ச்
சிரித்தார்கள்

கலைந்தார்கள்

கனவுகளாய்
கலர் கலராய்க்
கலைந்தார்கள்

எல்லோரும் போனபின்
அந்த அறையில் யாரோ
முனகுவது கேட்டது

திரும்பிப் பார்த்தேன்

தன்னை யாரும்
விசாரிக்கவில்லையே என்ற
விசாரத்தில்
கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது
என் கவிதை